சர்ச்சை நாயகன் சாம் பிட்ரோடா... அயலக காங்கிரஸ் தலைவராக மீண்டும் நியமனம்


சாம் பிட்ரோடா

மக்களவைத் தேர்தலின் மத்தியில் சர்ச்சைக்கு ஆளான சாம் பிட்ரோடா, அவர் ராஜினாமா செய்த அயலக காங்கிரஸ் தலைவர் பதவியில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரங்களின் மத்தியில் சாம் பிட்ரோடா தெரிவித்த 2 கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியை பெரும் சங்கடத்தில் தள்ளின. பரம்பரை வரி மற்றும் நிறவேறுபாடு தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்களில் இருந்து காங்கிரஸ் கட்சி தன்னை துண்டித்துக்கொள்வதாக அறிவிக்க வேண்டியதாயிற்று.

தேர்தல் அறிக்கைகளுடன் மோடி மற்றும் ராகுல்

ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் வரிசையில் ராகுல் காந்தி வரை காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கான கொள்கைகளை வகிப்பதிலும், வியூகங்களை முன்னெடுப்பதிலும் சாம் பிட்ரோடா முக்கிய பங்கு வகித்தார். ஆனால் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில், பாஜகவின் அசுர பிரச்சார வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது காங்கிரஸ் தடுமாறியபோது, சாம் பிட்ரோடாவின் கருத்துக்கள் வெளியாயின.

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருந்த சொத்து மறுபகிர்வு குறித்து பாஜக சர்ச்சையை கிளப்பியது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஆதரிக்கும் முகமாக, அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் பரம்பரை வரி என்பது குறித்து சாம் பிட்ரோடா பேட்டியளித்தார். இதனை கெட்டியாக பிடித்துக்கொண்ட மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள், ’காங்கிரஸார் நம் பெண்களின் தாலியையும் பறிக்க தயாராக இருக்கிறார்கள்’ என பிரச்சார மேடைகளில் முழங்கினார்கள்.

அடுத்தபடியாக, இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்கும் முயற்சியில், இந்தியாவின் நால் திசையிலும் நிறத்தின் அடிப்படையில் வேறுபட்டிருக்கும் குடிமக்களை சாம் பிட்ரோடா குறிப்பிட்டது, அடுத்த சர்ச்சைக்கு அடிபோட்டது. காங்கிரஸ் கட்சியின் பிரச்சார வேகத்துக்கு வேகத்தடையாகவும், பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சாம் பிட்ரோடாவின் கருத்துக்கள் அமைந்தன.

சாம் பிட்ரோடா

இவற்றையடுத்து சாம் பிட்ரோடா அமைதியில் ஆழ்ந்ததோடு, மே 8 அன்று அவரது ராஜினாமா அறிவிப்பும் வெளியானது. இதனையடுத்து சாம் பிட்ரோடா தெரிவித்த சர்ச்சை கருத்துகளின் வேகம் மக்களவை தேர்தல் பிரச்சாரக் களத்தில் தணிந்தது. அதன் பின்னர் சுமார் ஒன்றரை மாத இடைவெளியில், காங்கிரஸ் கட்சியின் அயலகத் தலைவராக சாம் பிட்ரோடாவை மீண்டும் நியமித்து காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று உத்தரவிட்டுள்ளார்.

x