வெற்று அச்சுறுத்தல்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை: 'ஜெய் பாலஸ்தீனம்' சர்ச்சைக்கு ஒவைசி பதில்


நாடாளுமன்றத்தில் அசாதுதீன் ஒவைசி

அசாதுதீன் ஒவைசி, நாடாளுமன்றத்தில் 'ஜெய் பாலஸ்தீனம்' என கோஷமிட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அவை தன்னை ஒன்றும் செய்யப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஒவைசி. ஐந்து முறை ஹைதராபாத் எம்பி-யான இவர், மக்களவையில் நேற்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது ‘ஜெய் பாலஸ்தீனம்' என கோஷமிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒவைசியின் இந்த கோஷத்துக்கு பாஜக கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நாடாளுமன்றத்தில் இருந்து ஒவைசியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பல அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, கூறுகையில், " சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போது வேறு நாட்டுக்காக கோஷம் எழுப்புவது பொருத்தமற்றது. ஒவைசியின் பாலஸ்தீன கோஷம் குறித்து சில உறுப்பினர்களிடமிருந்து புகார்கள் வரப் பெற்றுள்ளன" என்றார்.

இந்நிலையில் 'ஜெய் பாலஸ்தீனம்' கோஷம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறித்து ஒவைசி கூறுகையில், “அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். எனக்கும் அரசியலமைப்புச் சட்டம் பற்றி ஓரளவு தெரியும். இந்த வெற்று அச்சுறுத்தல்கள் என்னை ஒன்றும் செய்யப்போவதில்லை.” என்றார்.

அசாதுதீன் ஒவைசி

முன்னதாக ஒவைசி நேற்று கூறுகையில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தனது கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது என குறிப்பிடவில்லை. எல்லாரும் நிறைய சொல்கிறார்கள். 'ஜெய் பீம், ஜெய் மீம், ஜெய் தெலங்கானா, ஜெய் பாலஸ்தீனம்'னு தான் சொன்னேன். அது எப்படி எதிரானது? அரசியல் சாசனத்தில் உள்ள விதியை காட்டுங்கள். அங்குள்ள (பாலஸ்தீனத்தில்) மக்கள் ஆதரவற்றவர்கள். பாலஸ்தீனம் தொடர்பாக மகாத்மா காந்தி எத்தனையோ விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். யார் வேண்டுமானாலும் அவற்றைப் படிக்கலாம்.” என்றார்.

x