கொடைக்கானலில் போக்குவரத்து சிக்னல் திடீரென சாய்ந்து விபத்து... ஒருவர் பலியான சோகம்


போக்குவரத்து சிக்னல் சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி

கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே இருந்த போக்குவரத்து சிக்னல் மின் கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழந்தோடு, மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகவே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே கொடைக்கானல் நகர் பகுதியில் உள்ள பாம்பார்புரம், அப்சர்வேட்டரி, ஏரி சாலை, செண்பகனூர், மட்டும் கிராமப் பகுதிகளான மன்னவனூர், பூம்பாறை, வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது.

கொடைக்கானலில் காலை முதல் தொடர்ந்து மழை

இதன் காரணமாக ஆங்காங்கே மரக் கிளைகளும் சாய்ந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னல் மின் கம்பம் பலத்த காற்றின் காரணமாக சாய்ந்தது. இதில் சாலையில் சென்ற இருவர் மீது அந்த மின்கம்பம் விழுந்ததில் அவர்கள் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து சிக்னல் சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி

இதில் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுமை தூக்கும் தொழிலாளி தாஸ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்தவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியதோடு, போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பங்கள் மற்றும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x