ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதலிடத்தை பிடித்துள்ளார். நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பின்னடைவை சந்தித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கே தகுதிபெறாமல் வெளியேறியுள்ளது.
இந்த நிலையில் ஐசிசி தனது தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களில் டிராவிஸ் ஹெட் - 844 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், சூர்யகுமார் யாதவ் - 842 புள்ளிகளுடன் 2ம் இடத்தையும், பிலிப் சால்ட் - 816 புள்ளிகளுடன் 3ம் இடத்தையும், பாபர் அஸாம் - 755 புள்ளிகளுடன் 4ம் இடத்தையும் , முகமது ரிஸ்வான் - 746 புள்ளிகளுடன் 5ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 255 ரன்கள் எடுத்துள்ளார். அவரின் சராசரி 42 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 158 ஆகவும் இருக்கிறது. இந்த தொடரில் 149 ரன்கள் எடுத்துள்ள சூர்யகுமார் யாதவின் சராசரி 29.80 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 139.25 ஆகவும் உள்ளது. ஐசிசி டி20 தரவரிசையில் அக்டோபர் 30, 2022 முதல் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அணிகளை பொறுத்தவரை டி20 போட்டிகளில் இந்தியா முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளது.