கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் வீடு இடிந்து விழுந்து 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தட்சிண கன்னடாவில் ஜூன் 27-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு முதல் தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அந்த மாவட்டத்தில் கனமழைக்கு வீடு இடிந்து 4 பேர உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூருவின் புறநகரில் உள்ள மதானி நகரில் ஒரு வீட்டின் தடுப்புச்சுவர் நேற்று இரவு இடிந்து விழுந்தது. இதனால் சுவர் இடிபாடுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மதானி நகரைச் சேர்ந்த அபுபக்கர் என்பவரது வீட்டுச் சுவர் இடிந்து பக்கத்து வீட்டில் விழுந்தது. இதில் அவ்வீட்டில் வசித்து யாசீர் (45), அவரது மனைவி மரியம்(40), அவரது குழந்தைகள் ரியானா, ரிஃபா ஆகியோர் உயிரிழந்தனர் என்பது தெரிய வந்தது. அவர்களது உடல்களைப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கனமழையில் அடுத்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.