டி 20 கிரிக்கெட் போட்டியில் அதிக முறை 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் படைத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8-ன் கடைசி போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் - வங்கதேச அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 115 ரன்களே எடுக்க முடிந்தது.
அதிகபட்சமாக அந்த அணியின் ரஹ்மனுல்லா குர்பாஸ் 55 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சேர்த்தார். இப்ராகிம் ஸத்ரன்18, ரஷித் கான் 19, அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 10 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ரிஷாத் ஹோசைன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸ் முடிவடைந்ததும் மழைகுறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வங்கதேச அணி 19 ஓவர்களில் 114 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் வங்கதேச அணி 3.2 ஓவர்களில் 3 விக்கெட்கள்இழப்புக்கு 31 ரன்கள் சேர்த்திருந்தபோது மீண்டும் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தன்ஸித் ஹசன் 0 ரன்னில் பசல்ஹக் பரூக்கி பந்தில் ஆட்டமிழந்தார்.
மூன்றாவது ஓவரை வீசிய நவீன் உல் ஹக் அடுத்தடுத்த பந்துகளில் கேப்டன் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ (5), ஷகிப் அல் ஹசன் (0) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். மழை நின்ற பின்னர் ஆட்டத்தை தொடர்ந்த நிலையில் ரஷித் கான் பந்து வீச்சில் வங்கதேச அணி ஆட்டம் கண்டது.
அவரது பந்து வீச்சில் சவுமியா சர்க்கார் (10), தவுஹித் ஹிர்டோய் (14), மஹ்மதுல்லா (6), ரிஷாத்ஹோசைன் (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேசஅணி 11.4 ஓவர்களில் 7விக்கெட்கள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழைகாரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்துக்கு பின்னர் ஆட்டம் தொடங்கப் பட்டது.
தொடக்க வீரரான லிட்டன் தாஸ் நிலைத்து நின்று விளையாடினார். அவருக்கு உறுதுணையாக விளையாடி வந்த தன்ஸிம் ஹசன் ஷாகிப்10 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்த நிலையில் குல்பாதின் நயிப் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். கைவசம் 2 விக்கெட்கள் இருக்க வங்கதேச அணியின் வெற்றிக்கு 26 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்டன.
லிட்டன் தாஸ் 41 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் அரை சதம்அடித்தார். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவையாக இருந்தன. நவீன் உல் ஹக்வீசிய 18-வது ஓவரின் முதல்3 பந்துகளில் 3 ரன்கள் சேர்க்கப்பட்டன. 4-வது பந்தில் தஸ்கின் அகமதுவை (2) ஸ்டெம்புகள் சிதற வெளியேற்றினார் நவீன் உல் ஹக்.
கடைசி விக்கெட்டுக்காக களமிறங்கிய முஸ்டாபிஸுர் ரஹ்மான் (0) சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் வங்கதேச அணி17.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லிட்டன் தாஸ் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி குரூப் 1-ல் 4 புள்ளிகளுடன் அரை இறுதி சுற்றுக்குமுன்னேறியது. டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதியில் கால்பதிப்பது இதுவே முதன்முறை.
இந்த போட்டியின் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான் டி20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். 25 வயதான ரஷித் கான் டி 20 கிரிக்கெட் போட்டிகளில் 9 முறை நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
அவருக்கு அடுத்ததாக வங்கதேச அணி ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் 8 முறை நான்கு விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தையும், உகாண்டாவின் ஹென்றி செனியோண்டோ 7 முறை நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ரஷித் கான் நான்கு ஓவர்களில் 23 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.