சென்னையின் பிரபல ரவுடியை பழிக்குப் பழீயாக கொலை செய்து அடையாறு ஆற்றில் வீசியதாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் கீழே உள்ள அடையாறு ஆற்றின் கரையோரம் வாலிபர் உடல் நேற்று மிதந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீஸார் விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டனர். அந்த வாலிபரின் கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியான வெட்டுக்காயம் இருந்தது. இதனால் அவர் கொலை செய்யயப்பட்டு உடல் ஆற்றில் வீசப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மீட்கப்பட்ட வாலிபரின் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்டவர் யார், அவரைக் கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்டவர். கண்ணகி நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஆகாஷ் என்ற கருப்பு ஆகாஷ் ( 27) என்பது தெரியவந்தது. இவர் மீது கண்ணகிநகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடியாக இருந்துள்ளார். முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவரது நண்பர்கள் சேர்ந்து ஆகாஷை கொலை செய்தது தெரியவந்தது. கடந்த ஆண்டு அருண் என்பவரின் நண்பரை கொலை செய்த வழக்கில் ஆகாஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமீனில் வெளி வந்துள்ளார். இதனால் தன் நண்பனை கொலை செய்த ஆகாஷை பழிக்குப்பழி வாங்க அருண் திட்டமிட்டுள்ளார். அதற்காக ஆகாஷை கொலை செய்ய அவர் பலமுறை முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது,
இதனால் ஆகாஷ் நண்பர்களை வைத்தே அவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதன்படி ஆகாஷிற்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து அவர் மயங்கியதும் வெட்டிக்கொலை செய்து ஆற்றில் உடலை வீசியது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. இந்தக் கொலை தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.