கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலர் அடுத்தடுத்து உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து இதுவரை 21 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதால் அது விஷச்சாராயமாக மாறியதால் அதனை அருந்தியவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் போலீஸார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு, கள்ளச்சாராயம் காய்ச்சுவோரிடமிருந்து பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஏசுதாஸ் (39) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித்குமார்(37) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி ஜிப்மர், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் தற்போது 60-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.