24,500 யூனிட் ரத்த தானம்... அதானி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆச்சரியம்


கௌதம் அதானி

மோடி 3.0 ஆட்சி மலர்ந்ததில் அதானி குழுமம் புது ரத்தம் பாய்ந்ததாக காட்சியளிக்கிறது. அதனூடே கௌதம் அதானியின் பிறந்தநாளை முன்னிட்டு, குழுமத்தின் பணியாளர்கள் பெருமளவில் ரத்ததானம் செய்து ஆச்சரியம் தந்துள்ளனர்.

அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியின் 62வது பிறந்தநாளைக் கொண்டுவதன் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்டங்களை அதானி நிறுவனங்கள் முன்னெடுத்தன. இந்த வகையில், 73,500க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உதவக்கூடிய இரத்ததான இயக்கத்தின்போது சுமார் 24,500 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட 9,800 லிட்டர்களைக் குறிக்கும். கடந்த ஆண்டு அதானி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அங்கமாக 20,621 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.

ரத்ததானம்

கௌதம் அதானியின் நேற்றைய பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு 21 மாநிலங்களில் உள்ள 152 நகரங்களில் இந்த இயக்கம் நடத்தப்பட்டதாக அதானி குழுமத்தின் சமூக ஈடுபாடு பிரிவான அதானி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அதானி ஹெல்த்கேர் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இயக்கம் ஊழியர்களிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த உன்னதமான நோக்கத்திற்காக தாராளமாக பங்களித்த எங்கள் அதானி குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்களின் அர்ப்பணிப்பு, ஆண்டுதோறும், அவர்களின் இரக்கத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்வதற்கான எங்கள் கூட்டு அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது" என்று அதானி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் பிரிதி அதானி கூறினார்.

கௌதம் அதானி

சேகரிக்கப்பட்ட இரத்தம், பிளேட்லெட் செறிவுகள், பிளாஸ்மா, கிரையோபிரெசிபிடேட் மற்றும் அல்புமின் போன்ற பல்வேறு கூறுகளைப் பயன்படுத்துவதன் மூலம் 73,500 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உதவ முடியும் என அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். செஞ்சிலுவை சங்கம் மற்றும் அரசு மருத்துவமனைகளின் இரத்த வங்கிகளுடன் இணைந்து இந்த இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x