’இந்தியன்2’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், இயக்குநர் ஷங்கர் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். படம் பற்றி பேசும் போது நடிகர் சித்தார்த், “தாத்தா வராரு, கதறவிடப் போறாரு” என்றார்.
"இந்தக் காலக்கட்டத்தில் 'இந்தியன்2' மிக முக்கியமான படம். 21 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் ஷங்கர் எனக்கு 'பாய்ஸ்' படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். பின்பு, 'இந்தியன்2' படத்தில் கமல் சாருடன் நடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் என்னுடைய நிஜ குணாதிசயம் இந்தக் கதாபாத்திரத்தோடு நிறைய ஒத்துப் போகும். கமல் சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரைப் பார்த்து தான் நான் வளர்ந்தேன். அவரோடு இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. தாத்தா வராரு... கதறவிடப் போறாரு" என்று சித்தார்த் பேசினார்.
இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், "இவ்வளவு நாளாக சின்ன ஸ்கிரீனில் படம் பார்த்தோம். ஆனால், இவ்வளவு பெரிய தியேட்டரில் ஊடகங்களுடன் டிரெய்லர் பார்த்தது பிரமிப்பாக இருந்தது. கடின உழைப்பு எப்போதும் தோற்காது.
நான் சினிமாவுக்கு வந்த இந்த பத்து, பன்னிரெண்டு வருடங்களில் ஷங்கர் சார், கமல் சார் போல இவ்வளவு கடின உழைப்புக் கொடுத்தவர்களை நான் பார்த்தது கிடையாது. நிச்சயம் அவர்களது உழைப்பு வெற்றிப் பெறும்" என்றார்.