46,534 காலிப்பணியிடங்கள் 2026 ஜனவரிக்குள் நிரப்பப்படும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!


சட்டமன்றத்தில் பேசும் முதல்வர் ஸ்டாலின்

ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 46,534 இடங்கள் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110-விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், ’’நமது அரசு அமைதியான, வலிமையாக அரசாகத் திகழ்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 46,534 இடங்கள் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நிரப்பப்படும்.

முதல்வர் ஸ்டாலின்

அதேபோல 17,591 இடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும். காலியாக இருக்கும் பிற பணியிடங்களையும் சேர்த்து, மொத்தம் 75 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இவ்வாறு நிரப்பப்படும்’’ என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். .

தமிழக அரசு

மேலும் அவர் பேசுகையில் ’’கல்வி மூலமாக அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்கி வருகிறோம். அதற்காகவே புதுமைப் பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால்தான் நமது அரசு அடுத்த தேர்தலைப் பற்றி யோசிக்கும் அரசல்ல. அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கும் அரசு. அதனால் தான் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம். உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மூன்று ஆண்டுகளில் பல்வேறு அரசுத் தேர்வு வாரியங்கள், முகமை மூலம் 32 ஆயிரத்து 774 பணியிடங்கள் நிரப்பப்பட்டு, நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதேபோல்‌, உள்ளாட்சி அமைப்புகள்‌, அரசுத்‌ துறை நிறுவனங்கள்‌ போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில்‌ 32 ஆயிரத்து 709 இளைஞர்கள்‌ பணிநியமனம்‌ பெற்றனர்‌. மொத்தம்‌ 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில்‌ அரசுப்‌ பணி வழங்கப்பட்டது. அரசுப் பணி மட்டுமல்லாது பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூலமும் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

x