இன்று மிகக் கனமழை பெய்யும்... நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்!


கனமழை

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், நீலகிரி, கோயம்புத்தூரில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. மேலும், மேற்கு திசைக்காற்றின் மாறுபாடு காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று, ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கேரளா, கர்நாடகாவில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

x