சண்டைபோட்டவரின் குடும்பத்தை பழிவாங்க விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்... தஞ்சை வாலிபர் கைது


வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள பிரசன்னா

முன்விரோதம் காரணமாக தெரிந்தவரின் குடும்பத்தை பழி வாங்க, சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்திற்கு கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து வெடிகுண்டு விரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. சென்னை பெரும்பாக்கத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் 18ம் தேதி இந்த மையத்திற்கு அழைத்த மர்ம நபர் ஒருவர், சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடிக்கும் எனவும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இது தொடர்பாக இண்டிகோ ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் சேவை மையம், விமான நிலைய அதிகாரிகளுக்கும், சைபர் கிரைம் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

சென்னை விமான நிலையம்

இந்த தகவலின் அடிப்படையில் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் இந்த மிரட்டல் அழைப்பு போலி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அழைப்பு வந்த எண்ணைக் கொண்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மிரட்டல் விடுக்கப்பட்ட எண் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் உள்ள லேண்ட்லைன் எண்ணின் இணையதள இணைப்பு மூலம் அழைக்கப்பட்டிருனது தெரியவந்தது. இதையடுத்து சென்னை சைபர் கிரைம் போலீஸார் திருவையாறு சென்று பிரசன்னா (27) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல்

சென்னை பெரம்பூரில் வசித்தபோது அருகாமை வீட்டில் வசித்த குடும்பத்தினருக்கும், பிரசன்னாவுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. அவர்களை பழிவாங்கும் விதமாக இணையதளத்தை பயன்படுத்தி இந்த வெடிகுண்டு மிரட்டலை அவர் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன், இன்டர்நெட் மோடம், ரவுட்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட பிரசன்னா, விசாரணைக்குப் பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

x