தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுவன் விஸ்வாவுக்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நடிகர் விஜய் அப்செட்டில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உத்தரவை மீறி அவரது பிறந்தநாளை இன்று கொண்டாடிய போது சாகசத்தில் ஈடுபட்ட சிறுவன் விஸ்வாவுக்கும், தீயை பற்ற வைத்தவர்க்கும் கையில் தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. காவல்துறை அனுமதியில்லாமல் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதால் தகவல் அறிந்த போலீஸார் மண்டபத்தில் குவிந்துள்ளனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் நலத்திட்ட உதவிகள், சிறுவனின் சாகசம், அன்னதானம், கோயில் சிறப்பு அர்ச்சனை என பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க வெகு விமர்சையாக கொண்டாடினர்.
இந்த நிலையில் சிறுவனின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது சிறுவன் கையில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு ஓடு உடைக்கும் சாகத்தை செய்தார். அப்பொழுது சிறுவனின் கையில் தீ பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த சிறுவனை அவரது பெற்றோர்கள் நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சிகிச்சை முடிந்து தான் நலமாக இருப்பதாக சிறுவன் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழகத்தில் கள்ளச்சாராயம் விவகாரத்தால் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட வேண்டாம் என்று அறிக்கை மூலம் உத்தரவு இட்டார்.
கட்சியின் தலைவர் உத்தரவை மீறி சென்னை புறநகர் மாவட்ட தலைவர் ஈசிஆர் சரவணன் நடத்திய நிகழ்ச்சியில் சிறுவனுக்கு தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கட்சியின் தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் மத்தியில் பெரும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.