பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளையே ஒழிக்க முடியவில்லை எப்படி கள்ளச்சாரத்தை ஒழிப்பார்கள். கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே முடியாது என்று நடிகர் ரஞ்சித் ஆவேசமாக பேசியுள்ளார்.
’கவுண்டம்பாளையம்’ திரைப்பட இயக்குநரும் பிரபல நடிகருமான ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் கோவை கோனியம்மன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ரஞ்சித் பேசியதாவது, “வருகின்ற ஜூலை 5-ம் தேதி ’கவுண்டம்பாளையம்’ திரைப்படம் வெளியாகிறது. பெற்றோர்கள்,பெண் குழந்தைகள் மற்றும் நாடகக் காதலை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
சமூக நீதி என்றாலே கடும் கோபம் வரும். பெற்றோர்கள் பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். ஆனால் யாரோ ஒருவர் அந்த பிள்ளையை கல்யாணம் செய்வது சமூக நீதியா? சமூக நீதி போராளிகள் எல்லாம் தான் குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு சுயமரியாதை கல்யாணம் செய்து வைத்து விட்டு சமூகநீதி பற்றி பேச வேண்டும்” என்று கூறினார்.
மேலும், “பெற்றோர்கள் கையெழுத்து இல்லாமல் பத்திர பதிவுகள் அலுவலகத்தில் திருமணம் நடக்கக்கூடாது என்ற ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். இப்படி செய்தால் ஆணவக் கொலை, அடிதடி, கலாட்டா போன்றவற்றை ஏதும் நடக்காது.
கள்ளச்சாராயம் குடித்துவிட்டு ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால், தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கிறார்கள் அதைப்பற்றி யாரும் பேச மாட்டார்களா? கள்ளச்சாராயம் குடித்தால் உடனே இறந்து விடுவார்கள். மது குடித்தால் 5 ஆண்டுகள் கழித்து இறந்து விடுவார்கள்.
பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளையே ஒழிக்க முடியவில்லை எப்படி கள்ளச்சாரத்தை ஒழிப்பார்கள். கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது. கள்ளச்சாராயம் விற்பனை அரசியல்வாதிகளுக்கு, ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் நடந்து இருக்காது. ஆட்சியாளர்கள் ரோடு,தண்ணீர், சாராயம் ஆகியவற்றில் கொள்ளையடித்து வருகிறார்கள்.
அரசியலை பொறுத்த வரை ஒரு நல்ல தொழில். இதில் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். யாரும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வரவில்லை. கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம். ஆனால், விவசாயிகள் போதிய வருமானம் இல்லாமல் தற்கொலை செய்து கொண்டால் எந்த விதமான நிதியும் வழங்குவதில்லை.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்றால் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் தற்போது வரை கள்ளை இறக்குமதி செய்ய தமிழக அரசு தடை விதித்து வருகிறது. கள்ளை விற்பனை செய்தால் பொதுமக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. அந்த காலத்தில் கள் குடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை” என்று கூறினார்.