HBDVijay: கமல் டூ சீமான்... நடிகர் விஜய்க்கு வாழ்த்துக் கூறிய பிரபலங்கள்!


நடிகர் விஜய்

நடிகர் விஜய் தனது ஐம்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்ககளும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர், மநீம தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், ‘அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய ஆற்றலைப்பெருக்கி, ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் மனங்களையும் வென்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு, எல்லோரது நேசத்தையும் பெற்று உச்சம்தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி!

காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள, எனதருமை இளவல், எனது அன்புத்தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், என்னுயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!’ எனக் கூறியுள்ளார்.

அமமுக கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ‘தமிழ்த் திரையுலக முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் விஜய் அவர்கள் பூரண உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என ட்வீட் செய்திருக்கிறார்.

இயக்குநர் வெங்கட்பிரபு ‘GOAT' படப்பிடிப்புத் தளத்தில் விஜயுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, ‘கடந்த ஒரு வருடமாக அன்பு, சிரிப்பு என அழகான நினைவுகளைக் கொடுத்ததற்கு நன்றி’ எனச் சொல்லி பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார்.

நடிகர், இயக்குநர் எனப் பன்முகம் கொண்ட பிரபுதேவாவும் ‘GOAT' படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்துள்ளார். அவரும் விஜயுடனான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, ‘பிறந்தநாள் வாழ்த்துகள் சூப்பர் ஹீரோ’ எனக் கூறியிருக்கிறார்.

x