சினிமாவில் த்ரில்லர் ஜானரில் வெளிவரும் படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த ஜானரில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘லாந்தர்’. படம் எப்படி உள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம்.
நள்ளிரவில் ஆள் அடையாளம் தெரியாத சைக்கோ த்ரில்லர் தொடர்ச்சியாக எதிர்படும் நபர்களை மிருகத்தனமாக அடிக்கிறான். இவனைக் கட்டுப்படுத்த வரும் காவல்துறையையும் கண்மூடித்தனமாக தாக்குகிறான். இந்த விஷயம் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது. இந்த நபர் யார்? எதனால் இப்படி நடந்து கொள்கிறான் என விசாரணையைத் தொடங்குகிறார் ஏசிபி அரவிந்த் (விதார்த்). ஒரே இரவில் நடக்கும் இந்த சம்பவங்களுக்கான விடை கிடைத்ததா என்பதே ‘லாந்தர்’ படத்தின் கதை.
விதார்த் மற்றும் ஸ்வேதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தில் முக்கியமான கதாபாத்திரமான மஞ்சுவாக சஹானா என்பவர் நடித்திருக்கிறார். கள்ளச்சாராய விவகாரம் தற்போது பேசுபொருளாகி இருக்கும் சமயத்தில் விதார்த் நேர்மையான காவல்துறை அதிகாரி என்பதை காட்டுவதற்காக இப்படியான ஒரு காட்சியில் இருந்து படம் தொடங்குகிறது. விதார்த் மனைவிக்கு இருட்டு, தனிமைக்கு பயப்படும் ஃபோபியா இருக்கிறது.
அதை குணப்படுத்த முயலாமல் தனிமையிலேயே அவரை விதார்த் விடுவது ஏன் என புரியவில்லை. படம் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறோம், கதையில் ட்விஸ்ட் & டர்ன்ஸ் வைக்கிறோம் என சம்பந்தமே இல்லாத பல காட்சிகள் படம் முழுக்க வந்து பார்ப்பவர்களை அயர்ச்சி ஆக்குகிறது.
’பார்டர் லைன் பர்சனாலிட்டி டிஸ்ஸாடர்’ என்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் எதிர்படுபவர்களை எல்லாம் அடிக்கிறார் என்ற விஷயத்தை காவல்துறை கண்டறிகிறது. ஆனால், அந்த நபரைக் கண்டறிந்து காவல்துறை நெருங்கும்போது சொல்லி வைத்தாற்போல, காவல்துறையினரே பயந்து பின்வாங்குவதும் அவர்களின் விசாரணையும் அமெச்சூராக காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
படத்தில் சொல்லி இருக்கற அந்த அரிய வியாதியை மேலோட்டமாக அணுகி இருக்கிறார்கள். இதுபோன்ற அரிய வகை வியாதியால பாதிக்கப்பட்ட ஒருவர் சைக்கோவா மாறுவது வகையான கதை தமிழ் சினிமாவில் பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் இருந்தே நாம் பார்த்து வருவதுதான். இந்த அதரபழசான கதையை ஒரே இரவில் த்ரில்லிங்காக நான் லீனியராக எடுக்கிறோம் என பார்வையாளர்களை படுத்தி எடுத்திருக்கிறார்கள்.