’கள்ளச்சாராய வியாரிகளை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்’ என மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவுரை கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 35 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையில் நடிகர் விஜய், இயக்குநர் பா. இரஞ்சித் என வெகுசிலர் மட்டுமே தமிழக அரசுக்கு இந்த விஷயத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மற்ற சமூகப் பிரச்சினைகளில் குரல் கொடுக்கும் நடிகர்கள் கமல், சூர்யா, சத்யராஜ் போன்றோர் ஏன் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மெளனம் காத்து வருகின்றனர் என்ற கேள்வியையும் சமூகவலைதளத்தில் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
இதனை அடுத்து நடிகர், மநீம தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடையை விழைகிறேன். தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது’ எனக் கூறியுள்ளார்.
தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்காமல் அறிவுரை கூறும் விதமாக கமல் இந்த ட்வீட் பதிவிட்டுள்ளார் என நெட்டிசன்கள் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.