'பாக்கியலட்சுமி’ சீரியலில் மனதுக்கு நெருடலான சில விஷயங்கள் நடக்க இருக்கிறது என சீரியல் நாயகன் ‘கோபி’ சதீஷ் கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக சதீஷ் நடித்து வருகிறார். நெகட்டிவ் ஷேட் கலந்த கதாபாத்திரம் என்பதால் அவரைத் திட்டி பலரும் சோஷியல் மீடியாவில் மெசேஜ் அனுப்ப சீரியலை விட்டு விலகுவதாகச் சொல்லி பரபரப்பைக் கிளப்பினார்.
பின்பு, மீண்டும் கதாநாயகனாகத் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது ஒளிபரப்பாகி வரும் கதைப்படி கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவின் கர்ப்பம் கலைந்துள்ளது. இதற்குக் காரணம் கோபியின் அம்மாதான் என ராதிகா பழிபோட இது எதிர்பார்க்காத ட்விஸ்ட் என்று ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.
ராதிகாவின் பேச்சைக் கேட்டு கோபி அவரது பாசக்கார அம்மாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புவார் என்றும் தெரிகிறது. இதை மனதில் கொண்டே, இன்னும் பல நெருடலான விஷயங்கள் இனிவரும் எபிசோடில் இருக்கும் என வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் சதீஷ். அதில், ‘’பாக்கியலட்சுமி’ சீரியல் ஷூட் மீண்டும் தொடங்கியாச்சு. கதையில் நீங்கள் எதிர்பார்க்காத திருப்பங்கள் எல்லாம் இருக்கப் போகிறது.
மனதுக்கு நெருடலான பல விஷயங்களும் நடக்கப் போகிறது. ஆனால், அவை எல்லாம் வெளியில் சொல்ல முடியாது. நிச்சயம் நீங்கள் எபிசோடை என்ஜாய் செய்வீர்கள் என்று மட்டும் தெரியும். உங்களுக்குப் பிடித்த வகையில் இன்னும் பெட்டர் வில்லனாகவும் நடிகனாகவும் இருக்க விரும்புகிறேன்” என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.