நெருங்கிய நண்பனிடம் ரூ.12 லட்சம் வழிப்பறி; 6 பேரை தட்டி தூக்கிய போலீஸார்!


ராணிப்பேட்டை அருகே பழகிய நண்பனிடமிருந்து பேராசையால் கூலிப்படை உதவியுடன் 12 லட்சம் ரூபாய் ரொக்கத்தை அபேஸ் செய்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர் நபீஸ்(29). பின் பேமண்ட் பேங்க் எனும் தனியார் வங்கி ஏஜென்சி எடுத்து நடத்தி வருகிறார். இதில் அதே பகுதியை சேர்ந்த முகமது இதிரீஸ், நிசாமுதீன், அலாவுதீன் ஆகியோர் தொழில் பங்குதாரர்களாக சேர்ந்து தொழிலை நடத்தி வந்துள்ளனர். லட்சம் ரூபாயை டெபாசிட் செய்தால் 100 ரூபாய் கமிஷன் கிடைக்கும் என்பதால், பல பகுதிகளில் வரவேண்டிய பணத்தை நால்வரும் வசூல் செய்து அதை மறுநாள் வங்கியில் செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், திருத்தணி மற்றும் அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் பணம் வசூல் செய்யும் நிசாமுதீன், தனது நண்பனான ஆசிப்(26) என்பவரை அடிக்கடி வசூலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

கோப்புப்படம்

ஆசிப் மனதில் பணம் மீது பேராசை உருவாகியுள்ளது. அதிக பணத்தை பார்த்த ஆசிப், அதனை கொள்ளையடிக்க வேண்டும் என திட்டம் தீட்டி, விபரீதத்தின் உச்சமாக கூலிப்படையின் உதவியை நாடியுள்ளார். ஆற்காடு முப்பதுவெட்டியை சேர்ந்த அமீன்(29) என்பவரிடம் உதவி கேட்ட நிலையில், அமீன் சிறையில் தனக்கு நண்பரான திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை சேர்ந்த பாரதி(22), ஆரணியை சேர்ந்த சதீஷ்(20) ஆகியோரிடம் திட்டம் பற்றி கூறியுள்ளார். பின்னர் முப்பதுவெட்டி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருடன் கூட்டு சேர்ந்து வசூல் செய்து வரும் பணத்தை கொள்ளையட்டிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

போலீஸ் விசாரணை

கடந்த மாதம் 9ம் தேதி நிசாமுதீன், 12 லட்சம் ரூபாய் பணத்தை வசூல் செய்து எடுத்து வந்த போது, தென்நந்தியாலம் பகுதியில் நிசாமுதீனை வழிமறித்த கும்பல் 12 லட்சம் ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளது. இது குறித்து சக பங்குதாரர்களிடம் நிசாமுதீன் கூறிய நிலையில், அனைவரும் சேர்ந்து தங்களுக்கு தெரிந்தவர்களிடம் விசாரித்துள்ளனர். எந்த முன்னேற்றமும் இல்லாததால் கடந்த 9ம் தேதியன்று, ரத்தினகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று வாகன தணிக்கையின் போது ஆசிப்(26), அமீன்(29), அஜய்(26), தனுஷ்(18), அஷ்வின்(21), ஜெயச்சந்திரன்(33) ஆகிய 6 பேரை கைது செய்ததோடு, 1.20 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் ஆன பாரதி(22), சதீஷ்(20) ஆகிய இருவரையும் வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர். பணப்பேராசையால் பழகிய நண்பனிடமே கூலிப்படை உதவியோடு நடைபெற்ற இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x