அரியவகை செவித்திறன் குறைபாடு... அவதிப்படும் பிரபல பாடகி!


அல்கா

பிரபல பாலிவுட் பாடகி அல்கா யாகினிக் அரியவகை செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

பாடகி அல்கா யாகினிக் தமிழில் ’ஓரம்போ’, ‘இது என்ன மாயம்’ உள்ளிட்டப் பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்கள் பாடியவர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்காக பாலிவுட்டில் நிறைய சூப்பர் ஹிட் பாடல்கள் பாடியிருக்கிறார். இவரது குரல்வளத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அல்கா தனது சமூகவலைதளப் பக்கத்தில் அரியவகை செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அவர் கூறியிருப்பதாவது, “சில வாரங்களுக்கு முன்பு நான் ஒரு விமானத்தில் இருந்து வெளியேறும்போது ​​திடீரென்று என்னால் எதுவும் கேட்க முடியவில்லை என்று உணர்ந்தேன்.

நான் ஏன் ஆக்டிவாக இல்லை என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் என் நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு மெளனம் கலைக்க விரும்புகிறேன். வைரஸ் தாக்குதலின் காரணமாக அரிய உணர்வு நரம்பு செவித்திறன் இழப்பு எனக்கு ஏற்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றி இவ்வளவு நாட்கள் நான் அறியாமலே இருந்துவிட்டேன்.

அல்கா

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். எனது ரசிகர்கள் மற்றும் இளம் சகாக்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். மிகவும் சத்தமாக இசை மற்றும் ஹெட்ஃபோன்களை அடிக்கடி உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையாக இருங்கள்.

உங்கள் அனைவரின் அன்புடனும் ஆதரவுடனும் நான் என் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்து விரைவில் நலமுடன் உங்களிடம் வருவேன் என்று நம்புகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் உங்கள் ஆதரவும் புரிதலும் எனக்கு பெரிய ஆறுதல் கொடுத்துள்ளது’ என்று கூறியிருக்கிறார். அல்கா யாகினிக் சீக்கிரம் நலம் பெற்று வர வேண்டும் என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x