நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் நடிகர் சூரி புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்த ‘விடுதலை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் ‘கருடன்’ படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் மட்டுமல்லாது ‘கொட்டுக்காளி’, ‘ஏழு கடல் ஏழு மலை’, ‘விடுதலை2’ ஆகிய படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் சூரி.
இதில் ‘கொட்டுக்காளி’ படத்தினை ‘கூழாங்கல்’ இயக்குநர் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். ரிலீஸுக்கு முன்பே ‘கூழாங்கல்’ திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்று இருக்கிறது. இந்த வருட இறுதிக்குள் படம் வெளியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கதையின் நாயகனாகப் பல படங்களைக் கைவசம் வைத்துள்ள நடிகர் சூரி, மற்றுமொரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ’விலங்கு’ வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இந்தப் புதிய படத்தை இயக்க, நடிகர் சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம்தான் படத்தைத் தயாரிக்கிறது. இதுகுறித்தான அறிவிப்பு சீக்கிரம் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதையும் வாசிக்கலாமே...
தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடியுடன் மழை பெய்யும்... வெயிலும் 5 டிகிரி அதிகமாக இருக்கும்!