மேம்பட்ட ஜனநாயக நாடுகளில் தேர்தல் நடைமுறைகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் அல்ல, காகித வாக்குச்சீட்டுக்களால் ஆதரிக்கப்படுகின்றன என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திரா மாநில முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
இந்திய அரசியல் சூழலில் மின்னணு வாககுப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை விமானங்களின் கருப்புப் பெட்டி’யுடன் ஒப்பிட்டதோடு, அதனை யாரும் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்று நேற்று குற்றம் சாட்டி இருந்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், " ஜனநாயக அமைப்புகளை கைப்பற்றி வருகிறார்கள். இந்த சூழலில் வெளிப்படையான தேர்தல் செயல்முறைகளில் மட்டுமே பொது மக்களுக்கான பாதுகாப்பு உள்ளது. இவிஎம் இயந்திரங்கள் தற்போது கருப்பு பெட்டியாக உள்ளன.
தேர்தல் ஆணையம் இந்த இயந்திரங்கள் மற்றும் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதே போல சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட பல தலைவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படலாம் என்று தங்களது அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திரா மாநில முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், " மேம்பட்ட ஜனநாயக நாடுகளில் தேர்தல் நடைமுறைகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் அல்ல, காகித வாக்குச்சீட்டுகளால் ஆதரிக்கப்படுகின்றன.
நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் இந்தியாவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கைவிட வேண்டும் "என்று அவர் கூறினார். மேலும் "நீதி வழங்குவதை உறுதி செய்வதுடன், அதன் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.