சோகம்... ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தங்கைகள் 4 பேர் பலி!


மீட்பு நடவடிக்கை

உத்தரப் பிரதேச மாநிலம், பல்ராம்பூர் பகுதியில் ஆற்றில் குளித்தபோது, தண்ணீரில் மூழ்கி 4 சகோதரிகள் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் சிறுமிகள் ஆவர்.

உத்தரப் பிரதேச மாநிலம், பல்ராம்பூர் அருகே உள்ள கலு பங்காட் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு. இவருக்கு ரேஷ்மா (13), அப்சனா (11), குட்டி (9) மற்றும் லல்லி (7) ஆகிய 4 பெண் குழந்தைகள் இருந்தனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இவர்கள் 4 பேரும், ரெஹ்ரா பஜார் காவல் நிலையப் பகுதியில் உள்ள தாய் மாமன் வீட்டில் இருந்தனர்.

ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

இந்நிலையில் நேற்று மாலை இவர்கள் அருகில் குவானோ ஆற்றுக்குச் சென்று குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற அவர்கள் ஒருவர் பின் ஒருவராக மூழ்கினர்.

அவர்களது அலறல் சப்தத்தைக் கேட்ட கிராம மக்கள், 4 சிறுமிகளையும் காப்பாற்ற முயன்றனர். எனினும், கிராமத்தினரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

உயிரிழப்பு

பின்னர், உள்ளூர் மக்களின் உதவியுடன் 4 சிறுமிகளின் சடலங்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்றில் குளிக்கச் சென்று 4 சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

x