”ஓடாத படத்திற்கு சக்சஸ் மீட் தேவையில்லை. படத்தின் தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்” என்று நடிகர் சசிக்குமார் பேசியிருக்கிறார்.
நடிகர் சசிக்குமார், சூரி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான ‘கருடன்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று நடந்து. இயக்குநர் துரை செந்தில்குமார், வெற்றிமாறன் உள்ளிட்டப் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர். நடிகர் சசிகுமார் பேசுகையில், ''தற்போதெல்லாம் ஓடாத திரைப்படங்களுக்கு தான் சக்சஸ் மீட் வைக்கிறார்கள் என்று ஒரு பேச்சு இருக்கிறது.
அது ஏன்? என்றால் தோல்வி என்றாலே அனைவருக்கும் பயம். தோல்வியை யாரும் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த திரைப்படத்தில் வெற்றி பெற முடியும். அதனால் ஒரு திரைப்படம் தோல்வி அடைந்தால், அது தோல்வி அடைந்திருக்கிறது என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும், “’கருடன்’ படம் வெளியாகும் வரை இந்த படம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் இருந்தவர் தயாரிப்பாளர் குமார் மட்டும் தான். மற்ற அனைவரும் நான் உட்பட படம் வெளியான பிறகு தான் தெரியும் என்று இருந்தோம்.
பட வெளியீட்டிற்கு முன்னரே இந்த திரைப்படத்தை டிஜிட்டல் தளங்களில் விற்பனை செய்ய முடியவில்லை என்ற நிலை இருந்தது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று நம்பியவர் தயாரிப்பாளர் தான்.
இந்தத் திரைப்படத்தில் சூரிக்காக நடிக்க வந்தேன். அது எனக்கு நல்ல விதமாக அமைந்து விட்டது. இனிமேல் சூரியை யாரும் பரோட்டா சூரி என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அதையெல்லாம் தன்னுடைய சிறந்த நடிப்பால் அழித்துவிட்டார். இனி அவர் கதையின் நாயகனாகத்தான் இருப்பார்.
கதையின் நாயகனாக இருக்கும் வரை அவர் தொடர்ந்து வெற்றிகளைப் பெறுவார். அவர் கதாநாயகனாக மாறும்போதுதான் சற்று கடினமாக இருக்கும். ஆனால் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்த சூரியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய வெற்றியை நான் வெற்றி பெற்றது போல் மகிழ்ச்சி அடைகிறேன்.
ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடும்போது நமக்குள் ஒரு பயம் ஏற்படும். அவர்கள் நம்பிக்கை கொடுக்கும் போது நமக்குள் ஒரு பொறுப்புணர்வு உண்டாகும். அந்தப் பொறுப்பை காப்பாற்ற வேண்டும் என்ற பயம் வரும். அந்த பயம் தான் நம்மை பல வருடம் தொடர்ந்து கடுமையாக உழைக்கத் தூண்டும். அதனால் சூரி வெற்றி பெற்றது நாம் அனைவரும் வெற்றி பெற்றது போலத்தான்” என்று பாராட்டினார்.
இதையும் வாசிக்கலாமே...