‘விண் கல் விழுந்ததால் 4 அடி ஆழம் பள்ளம்’ - திருப்பத்தூர் ஆட்சியர் நேரில் ஆய்வு


திருப்பத்தூர் அருகே விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளத்தை ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே வானில் இருந்து விண் கல் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளத்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சொட்டை கவுன்டனூர் கிராமத்தில் ரவி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெடி விபத்து ஏற்பட்டது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. அப்பகுதி மகக்ள் விரைந்து சென்று பார்த்தபோது சுமார் 4 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டிருப்பதைப் பார்த்தனர். அந்தப் பள்ளத்தில் சாம்பல் கலந்த கல் ஒன்று கிடந்ததைப் பார்த்தனர்.

அந்த இடத்தில் இருந்து அதிகப்படியான அனல் காற்று வீசியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இரவு நேரத்தில் விழுந்த மர்ம பொருள் வானில் இருந்து விழுந்த சிறிய விண் கல்லாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், கல் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளத்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் வட்டத்தை சேர்ந்த அச்சமங்கலம் என்கிற கிராமத்தில் விழுந்த மர்ம பொருள் குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. தமிழ்நாடு சயின்ஸ் டெக்னாலஜியின் நிர்வாக இயக்குநர் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக பேசப்பட்டது. அவர் விரைவாக, அறிவியலாளரை அனுப்பி வைத்து ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளனர்’’ என்றார்.

இந்த ஆய்வின் போது திருப்பத்தூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். தொடரும் விண்கல் விபத்துகள்: ஏற்கெனவே, கடந்த 2016ம் ஆண்டு நாட்றாம்பள்ளி அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வானில் இருந்து விழுந்த விண் கல்லால் பயங்கர சத்தத்துடன் விபத்து ஏற்பட்டது. அப்போது, கல்லூரி வளாகத்தின் கண்ணாடிகள், பேருந்து கண்ணாடிகள், சின்டெக்ஸ் தொட்டிகள் நொறுங்கியது. இதில், பேருந்து ஓட்டுநர் காமராஜ் என்பவர் உயிரிழந்தார். கல்லூரி மாணவர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.

அப்போது, நடத்தப்பட்ட ஆய்வில் விண்கல் விழுந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறி சிறிய அளவிலான விண் கற்களையும் காவல் துறையின் தடய அறிவியல் அதிகாரிகள் சேகரித்தனர். அதேபோல், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வாணியம்பாடி அருகேயுள்ள தெக்குப்பட்டு பகுதியில் ஊதுபத்தி தொழிற்சாலை மீது விண்கல் விழுந்ததில் அந்த தொழிற்சாலை முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும் என்று கூறப்பட்டது. எனவே, அச்சமங்கலம் சொட்ட கவுன்டனூரில் விழுந்ததும் விண் கல்லாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.