டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி... முதல் வெற்றியைப் பதிவு செய்த பாகிஸ்தான்!


பாகிஸ்தான் அணி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி, கனடாவிற்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ’ஏ’ பிரிவு லீக் சுற்று ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடரில் 2 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த பாகிஸ்தான் அணி மூன்றாவது போட்டியில் களமிறங்கி இருந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கனடா அணியில் துவக்கட்டக்காரர் ஆரோன் ஜான்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கனடா அணி

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர், ஹாரிஸ் ராவூஃப், ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் துவக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 53 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தான் அணி முதல் வெற்றி

அவருடன் இணைந்து பாபர் அசாம் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 17.3 ஓவர் முடிவில் அந்த அணி 107 ரன்களை எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கனடா தரப்பில் டில்லொன் ஹெய்லிகர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் பாகிஸ்தான் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

x