’பிரியங்கா காந்தி என் பேச்சைக்கேட்டு வாராணசி தொகுதியில் போட்டியிட்டிருப்பின், பிரதமர் மோடியை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருப்போம்’ என்று தெரிவித்திருக்கிறார் ராகுல் காந்தி.
உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் ராகுல் காந்தி, இன்றைய தினம் அங்கு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பல சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டார். கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய ராகுல் காந்தி, இம்முறை மாநிலத்தின் மற்றுமொரு காங்கிரஸ் வாக்கு வங்கி தொகுதியான ரேபரேலியில் நின்று ஜெயித்திருக்கிறார்.
ராகுல் காந்தி தவிர்த்த அமேதி தொகுதியில் காங்கிரஸ் விசுவாசியான கே.எல்.சர்மா போட்டியிட்டு, மத்திய அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானியை தோற்கடித்தார். இவை மட்டுமன்றி மாநிலம் நெடுகவும் காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி கணிசமான வெற்றியை பதிவு செய்தது. மறுபக்கத்தில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக தனது மோசமான செயல்திறனைப் பதிவுசெய்தது.
80 தொகுதிகள் அடங்கிய மாநிலத்தில் 33 மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. இன்னொரு அதிர்ச்சியாக வாராணசியில் போட்டியிட்ட மோடி, காங்கிரஸ் கட்சியின் அஜய் ராயை விட சில சுற்றுகளில் பின்தங்கியிருந்தார். பாஜகவினரை பதறவைத்த இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவாக, 1.6 லட்சம் வித்தியாசத்தில் மோடியின் வெற்றி உறுதியானது. ஒரு பிரதமர் இப்படி இழுபறியில் வெற்றி பெற்றது, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு உற்சாகம் தந்திருக்கிறது.
இந்த வகையில் வாராணசியில் மோடியை காங்கிரஸ் தோற்கடிப்பதற்கான வாய்ப்பு குறித்து, அதிகம் அறியப்படாத தகவலொன்றை காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் ராகுல் காந்தி இன்று பகிர்ந்து கொண்டார். “என் சகோதரி பிரியங்கா என் பேச்சைக் கேட்டு வாராணசியில் போட்டியிட்டிருப்பின், பிரதமர் மோடியை 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருப்பார்” என்று அலுத்துக்கொண்டார். ராகுலின் பேச்சும், அதற்கான வாய்ப்பு வாராணசியில் இருந்ததும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பெரும் உற்சாகம் தந்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...