காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷ் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று 50 லட்ச ரூபாய்க்கு மேல் பணத்தை பந்தயத்தில் கட்டி தோற்றுப்போனவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள பெங்களூரு புறநகர் தொகுதியில் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் காங்கிரஸ் வேட்பாளராக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மதச்சார்பற்ற ஜனதா தளத்தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மருமகனான டாக்டர் மஞ்சுநாத் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார்.
இந்த தொகுதியில் டி.கே.சுரேஷ் வெற்றி பெறுவார் என்று காங்கிரஸ் நினைத்தது. ஆனால், அவர் பாஜக வேட்பாளர் டாக்டர் மஞ்சுநாத்திடம் 2 லட்சத்து 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இந்த தோல்வியால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலில் டி.கே.சுரேஷ் வெற்றி பெறுவார் என சுமார் 50 லட்ச ரூபாய்க்கு மேல் பந்தயம் கட்டிய சிவராஜ்(40) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராம்நகர் தாலுகாவில் பிடாடி அருகே உள்ள கெஞ்சளகுப்பை பகுதியைச் சேர்ந்த சிவராஜ், தேர்தலில் டி.கே.சுரேஷ் வெற்றி பெறுவார் என்று பந்தயம் கட்டியுள்ளார். இதில் 50 லட்ச ரூபாய்க்கும் மேல் அவர் இழந்ததாக கூறப்படுகிறது. இதற்கான பணத்தைக் கட்ட முடியாமல் இன்று காலை வீட்டில் சிவராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிடாதி போலீஸார் விரைந்து வந்து சிவராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.