ஒடிசா புதிய முதல்வரைத் தேர்வு செய்யப்படுவதை மேற்பார்வையிட மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பூபேந்திர யாதவ் ஆகியோரை பாஜக நியமித்துள்ளது.
ஒடிசா மாநிலத்துக்கு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டப் பேரவைத் தேர்தலும் நடத்தப்பட்டது. கடந்த 4 ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் சட்டப் பேரவை தேர்தலில், மொத்தம் உள்ள 147 இடங்களில் 78 இடங்களில் வெற்றி பெற்று, பிஜு ஜனதா தளத்தை வீழ்த்தி, பாஜக ஆட்சியைப் பிடித்தது.
தற்போது தேர்தல் முடிவுகள் வெளி வந்து ஒருவாரம் ஆன நிலையில் ஒடிசாவின் புதிய முதல்வர் யார் என்பது இன்னும் தேர்வு செய்யப்படாமல் உள்ளது.
பாஜகவின் ஒடிசா பொறுப்பாளர் விஜய் பால் சிங் தோமரின் கூற்றுப்படி, பாஜக சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்றும், புதிய அரசு நாளை மறுநாள் (ஜூன் 12) பதவியேற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சென்றுவிட்டு இன்று ஒடிசா திரும்பிய, எம்எல்ஏ-வாக வெற்றி பெற்ற சுரேஷ் பூஜாரி கூறுகையில், "புதிதாக நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளர்கள் ராஜ்நாத் சிங், பூபேந்தர் யாதவ் தலைமையிலான அனுபவம் வாய்ந்த தலைவர்கள் சட்டப் பேரவை உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவார்கள்" என்றார்.
பிரதமர் மோடியின் 3வது பதவிக்காலத்தில் கேபினட் அமைச்சராக இணைந்துள்ள தர்மேந்திர பிரதான், முதல்வராக தேர்வாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக முன்பு தகவல்கள் வெளியாகின.
தற்போது அவர் மத்திய அமைச்சராகிவிட்டதால், புதுடெல்லி சென்று திரும்பிய பிரஜராஜ் நகர் எம்எல்ஏ- சுரேஷ் பூஜாரி மீது தற்போது கவனம் குவியத் தொடங்கியுள்ளது. இவர் தவிர மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல், கே.வி.சிங், மோகன் மாஜி ஆகியோரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.
ஒடிசாவில் சட்டப் பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைப் போன்றே, மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 20ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...