பீகாரில் ரூ.1,500க்கு வாங்கி கோவையில் ரூ.2.50 லட்சத்துக்கு விற்கப்பட்ட பெண் குழந்தை... விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!


கைது செய்யப்பட்ட பூனம் தேவி, மேகா குமாரி

பீகாரில் 1,500 ரூபாய்க்கு பெண் குழந்தையை விலைக்கு வாங்கி, அதனை கோவையில் உள்ள தம்பதியினரிடம் 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த 5 பேரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள திம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். விவசாய வேலை செய்து வரும் இவருக்கு, கடந்த 17 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை. இதனால் குழந்தை ஒன்றை தத்தெடுத்துக் கொள்ள அவர் விரும்பியுள்ளார். அப்போது அதே பகுதியில் ஹோட்டல் கடை நடத்தி வரும் வடமாநில தம்பதிகளான அஞ்சலி மற்றும் மகேஷ் குமார் ஆகியோரிடம் விஜயனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தங்களிடம் பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று இருப்பதாகவும், பீகாரிலிருந்து குழந்தையை தமிழகத்திற்கு கொண்டு வந்து விஜயனிடம் கொடுக்க, இரண்டரை லட்சம் ரூபாய் பணம் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள விஜயன்

மேலும் உரிய ஆவணங்களுடன் குழந்தையை விற்பனை செய்வதாகவும், அவர்கள் விஜயனுக்கு உறுதி அளித்துள்ளனர். இதனை நம்பிய விஜயன் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை அஞ்சலி, மகேஷ் குமார் தம்பதிகளிடம் வழங்கி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்து 15 நாட்களேயான பெண் குழந்தை ஒன்றை விஜயன் தம்பதிகளிடம், அஞ்சலி மற்றும் மகேஷ் குமார் ஆகியோர் வழங்கி உள்ளனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சைல்ட் லைன் அமைப்பிற்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சைல்ட் லைன் அமைப்பினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தையை விலை கொடுத்து வாங்கியது தெரிய வந்தது.

கருமத்தம்பட்டி காவல் நிலையம்

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சைல்ட் லைன் அமைப்பினர் அளித்த புகாரின் பேரில், கருமத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியானது. பீகாரில் உள்ள அஞ்சலியின் தாயார் பூனம் தேவி மற்றும் அவரது இளைய மகள் மேகாகுமாரி ஆகியோர் பீகாரில் வசித்து வருகின்றனர். அங்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் கொண்ட பெற்றோருக்கு பிறந்த மூன்றாவது பெண் குழந்தையை, தாங்கள் வளர்த்துக் கொள்வதாக கூறி அவரிடம் 1,500 ரூபாய்க்கு குழந்தையை வாங்கி உள்ளனர். பின்னர் அக்குழந்தையை ரயில் மூலம் கோவை கொண்டு வந்து விஜயனிடம் இரண்டரை லட்சம் ரூபாய் பேசி விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அஞ்சலி, மகேஷ் குமார், பூனம் தேவி, மெகா குமாரி மற்றும் குழந்தை வாக்கிய விஜயன் உட்பட 5 பேரை சூலூர் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டதில், ஏற்கனவே அவர்கள் மீது கஞ்சா விற்பனை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

மேலும் மற்றொரு குழந்தையை ஆந்திராவைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் விலை பேசி விற்றதும் தெரியவந்தது. தற்போது இரண்டு குழந்தைகளையும் மீட்டுள்ள கருமத்தம்பட்டி போலீஸார் இந்த கும்பல் வேறு ஏதேனும் குழந்தை கடத்தல்களில் ஈடுபட்டு உள்ளதா என்பது தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!

சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!

x