டெல்லி ரூஸ் அவென்யூ பகுதியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை வரும் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என அக்கட்சிக்கு உச்ச நீதிமன்றம் இன்று காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டது.
டெல்லியில் நீதித்துறை உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு, ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து வரும் ஜூன் 15ம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சி தனது அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி ஆம் ஆத்மி உச்சநீதிமன்றத்தில் மற்றொரு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆம் ஆத்மி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “ஆம் ஆத்மி கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்தால் தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டதை மேற்கோள் காட்டி, அக்கட்சி அலுவலகத்துக்கு மத்திய அரசு இடம் ஒதுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
டெல்லி உயர்நீதிமன்றம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பரமேஸ்வர், கடந்த 4 ஆண்டுகளாக தங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்றும், ஒவ்வொரு ஆண்டும் கட்டிட செலவுகள் அதிகரித்து வருவதாகவும் கூறினார்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்த வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, கடைசி வாய்ப்பாக, முந்தைய உத்தரவின் மூலம் வழங்கப்பட்ட காலக்கெடுவை, வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நீட்டிக்கிறோம்.” என கூறி உத்தரவிட்டனர்.