"சிம்புவுடன் எனக்குப் பிரச்சினை இல்லை. அவருடைய அம்மா, அப்பாவால் தான் பிரச்சினை வந்தது” என்று இயக்குநர் பாண்டிராஜ் சமீபத்தியப் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
’பசங்க’, ‘கடைக்குட்டி சிங்கம்’ போன்றப் படங்களை இயக்கியவர் இயக்குநர் பாண்டிராஜ். சூர்யாவை வைத்து ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கியவர் தற்போது அடுத்தப் படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் பிஸியாக இருக்கிறார்.
இவருக்கும் சிம்புவுக்கும் பிரச்சினை என்று பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
“சோம்பேறிகளுடன் பணிபுரிவது எப்போதும் எனக்குப் பிடிக்காத ஒன்று. அப்படியானவர்களிடம் இருந்து விலகி விடுவேன். இதுவரை நான் இயக்கிய அனைத்துப் படங்களின் ஹீரோக்களுடனும் நல்ல நட்பு உள்ளது.
எனக்கும் சிம்புவுக்கும் இடையில் பிரச்சினை என்று பல செய்திகள் வருகிறது. அது உண்மை இல்லை. அவரால் எனக்குப் பிரச்சினை இல்லை. அவரது அம்மா, அப்பாவால் தான் எனக்குப் பிரச்சினை வந்தது. ‘இது நம்ம ஆளு’ படம் இயக்கிய போது படப்பிடிப்பிற்கு சிம்பு லேட்டாக தான் வருவார்.
ஆனால், 8 மணி நேர வேலையை 5 மணி நேரத்தில் முடித்து விடுவார். இவ்வளவு திறமையான நபர் இப்படி இருக்கிறாரே என்று எனக்கு வருத்தம் தான் உண்டு. மற்றபடி அவருடன் இப்போது வரை நல்ல நட்பில் தான் உள்ளேன்” என்று கூறியிருக்கிறார்.