பிரதமர் மோடியின் 3வது பதவிக்காலத்தின் புதிய அமைச்சரவையில், கேபினட் அமைச்சர் பதவி வழங்காததால், என்டிஏ கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார் பிரிவு) அதிருப்தி அடைந்துள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) சார்பில் பிரதமராக தொடர்ந்து 3வது முறையாக நரேந்திர மோடி நேற்று இரவு பதவி ஏற்றார். அவருடன் கேபினட் அமைச்சர்கள், இணையமைச்சர்கள் (தனிப்பொறுப்பு), இணையமைச்சர்கள் என 71 பேரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
இவர்களுக்கு டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை நடைபெறும் புதிய அரசின் முதல் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் இலாகா ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அமைச்சரவையில் பாஜக கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சியின் ராம் மோகன் நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ராஜீவ் ரஞ்சன் சிங், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எஸ்) தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி, லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான், கர்நாடகாவின் ஜேடிஎஸ் கட்சித் தலைவர் எச்.டி.குமாரசாமி ஆகிய கூட்டணி கட்சியினருக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (அஜித் பவார் பிரிவு) தலைவர் பிரஃபுல் படேலுக்கு, கூட்டணி தலைமை இணை அமைச்சர் பதவி வழங்க முன்வந்ததாகவும், ஆனால் தங்கள் கட்சிக்கு கேபினட் அமைச்சர் பதவி தான் வேண்டும் என கூறி, அந்த வாய்ப்பை அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் நிராகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நேற்று பதவியேற்ற 71 அமைச்சர்களில் பிரஃபுல் படேலுக்கு இடமளிக்கப்படவில்லை.
இதுகுறித்து பிரஃபுல் படேல் கூறுகையில், "எங்கள் கட்சிக்கு தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி வழங்குவதாக கடந்த சனிக்கிழமை இரவு எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் மத்திய அரசில் கேபினட் அமைச்சராக இருந்துள்ளேன். எனவே தற்போது இணை அமைச்சர் பதவி வழங்குவது எனக்கு வீழ்ச்சியாக அமைந்து விடும்" என்றார்.
பிரதமர் மோடி தவிர்த்த 71 மத்திய அமைச்சர்களில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 6 பேர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.