நாளை பள்ளிகள் திறப்பு... முதல் நாளே 70 லட்சம் மாணவ மாணவியருக்கான பாடப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு


பள்ளி மாணவியர்

கோடை விடுமுறைக்குப் பின்னர் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 10 அன்று, சுமார் 70 லட்சம் மாணவ மாணவியருக்கு பாடப்புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2024 - 2025 கல்வியாண்டு நாளை தொடங்குகிறது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சற்று முன்னதாகவே கடந்த கல்வியாண்டின் வேலைநாட்கள் மற்றும் தேர்வுகள் நிறைவுற திட்டமிடப்பட்டிருந்தன. அதன்படி கோடை விடுமுறைக்குப் பிந்தைய பள்ளி திறப்பு ஜூன் 6 என்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக பள்ளி திறப்பை தள்ளிப்போடுமாறு எழுந்த கோரிக்கைகளை அடுத்து, ஜூன் 10க்கு பள்ளி திறப்பு அறிவிப்பானது.

அரசுப் பள்ளி மாணவியர் - ஆசிரியை

இதன்படி தமிழகத்தின் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் இயங்குபவை உள்ளிட்டவற்றில் 1 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ மாணவியருக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட உள்ளன. இத்துடன் நோட்டுகள், புவியியல் வரை படம் உள்ளிட்டவையும் அவை அவசியப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த வகையில் 70.67 லட்சம் மாணவ மாணவியருக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவதோடு, 60.75 லட்சம் மாணவ மாணவியருக்கு நோட்டுப் புத்தகமும், 8.22 லட்சம் மாணவ மாணவியருக்கு புவியியல் வரைபடமும் வழங்கப்பட உள்ளன. கல்வியாண்டை உற்சாகமாக தொடங்க உதவும் வகையில், கல்வியாண்டின் முதல் நாளிலேயே இவை வழங்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பாடப் புத்தகங்கள்

இவை தவிர்த்து தமிழக அரசின் சார்பில் புத்தகப்பை, காலணி, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ணப் பென்சில் மற்றும் கிரையான்கள், ஜியாமெட்ரி பாக்ஸ் உள்ளிட்டவையும் அவை அவசியப்படும் மாணவ மாணவியருக்கு காலக்கிரமத்தில் வழங்கப்பட உள்ளன.

x