வல்லநாடு ஆற்று பாலத்தில் சீரமைக்கப்பட்ட பகுதியில் மீண்டும் சேதம்


வல்லநாடு ஆற்று பாலத்தில் சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடைபெற்று வந்த பகுதியில் மீண்டும் ஏற்பட்ட சேதத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு தாமிரபரணி ஆற்று பாலத்தில் சீரமைக்கப்பட்ட பகுதியில் மீண்டும் சேதம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே வல்லநாடு பகுதியில் அமைக்கப்பட்ட பாலம் அடிக்கடி சேதமடைந்ததை தொடர்ந்து இந்த பாலத்தை முழுமையாக சீரமைக்கும் பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.

பாலத்தின் இரு பகுதிகளையும் முழுமையாக நவீன தொழில்நுட்பத்தில் சீரமைக்க ரூ.13.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 12 மாதங்களில் பணிகளை முடிக்கும் வகையில் ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கி ஒன்றரை ஆண்டு முடிந்த நிலையில் பாலத்தின் ஒரு பகுதி (தூத்துக்குடி- திருநெல்வேலி வழித்தடம்) மட்டுமே முழுமையாக சீரமைக்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதத்தில் கடைசி வாரத்தில் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

பாலத்தின் மற்றொரு பகுதியையும் (திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடம்) சீரமைக்கும் பணி கடந்த கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் முடிவடைவில்லை. இதனால் அனைத்து வாகனங்களும் சீரமைக்கப்பட்ட பகுதி வழியாக ஒருவழிப் பாதையில் (தூத்துக்குடி- திருநெல்வேலி வழித்தடம்) இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முழுமையாக சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடைபெற்று வரும் இந்த பகுதியில் நேற்று திடீரென சேதம் ஏற்பட்டது.

பாலத்தின் மேல் போடப்பட்ட சாலை பகுதியில் வெடிப்பு ஏற்பட்டு ஓட்டை விழும் நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து சேதமடைந்த பகுதியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து சேதமடைந்த பகுதியை முழுமையாக அகற்றிவிட்டு, புதிதாக தார் போட்டு சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் இன்று ஈடுபட்டுள்ளனர்.

வல்லநாடு ஆற்று பாலத்தில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்ட 5 மாதங்களில் ஏற்பட்ட சேதம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வல்லநாடு பாலம் சீரமைப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். மீதமுள்ள பணிகளையும் விரைவாக முடித்து பாலத்தின் இரு பகுதிகளிலும் வாகன போக்குவரத்து தடையின்றி செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x