காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!


பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்

தமிழகத்தில் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்திருப்பது கவலை அளிப்பதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது.

இதன் காரணமாக அதிமுக, பாஜக கட்சிகள் 2வது இடத்தில் யார் வெற்றி பெற்றார்கள், யாருக்கு வாக்கு சதவீதம் அதிகம், குறைவு என புள்ளி விவரங்களை குறிப்பிட்டு கடந்த இரண்டு நாட்களாக கடும் வார்த்தைப் போர்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக, அதிமுக

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம் என தெரிவித்திருந்தார்.

இது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் எஸ்.பி.வேலுமணி கருத்தை நிராகரித்துள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து அதிமுக, பாஜக பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வரும் சூழலில் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“அதிமுக – பாஜக கூட்டணி வைத்திருந்தால் வரக் கூடிய கணக்கு பற்றி சொல்லப்படும் தகவல்கள் வேறு வேறு மாதிரி திசை திருப்பப்படுகிறது.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்தர்ராஜன்

பாஜகவுடன் சேர்ந்தாலே தோற்றுதான் போகமுடியும் என சொல்லிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம், தற்போது பாஜகவும் சேர்ந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என சொல்வதை நான் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் இடங்கள் கிடைக்கவில்லை என்பதை எல்லா தொண்டர்கள்போல் நான் கவலையாக பார்க்கிறேன். இதைவிட, எந்தப் பலனுமில்லாமல் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடங்கள் கிடைத்திருக்கிறதே என்பதுதான் கவலை."

இவ்வாறு தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.

x