கட்சித் தலைவர்களை சமூக ஊடகங்களில் சீண்டும் இணையவாசிகளுக்கு எதிராக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக தமிழகத் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பொறுப்பேற்றிருந்தார். தனது தணியாத அரசியல் ஆர்வம் காரணமாக மக்களவைத் தேர்தலின் சமீபத்தில் மீண்டும் பாஜகவில் இணைந்தார். தென்சென்னை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகவும் போட்டியிட்டார்.
ஆனால் தேர்தல் முடிவில் திமுகவின் சுமதி தமிழச்சி தங்கபாண்டியனிடம் தோல்வி அடைந்தார். அரசியல் பிரவேசம், எம்.பி பதவி, மத்திய அமைச்சர் கனவு என ஆர்வத்துடன் களமிறங்கியவருக்கு இதனால் கடும் ஏமாற்றம் கிடைத்தது. ஆனபோதும் தேர்தல் முடிவுகள் வெளியான இரண்டாவது நாளே வழக்கமான தமிழிசை சௌந்தரராஜனாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். தனது தோல்வி குறித்தும் அதனை தான் ஏற்றுக்கொண்ட விதம் குறித்தும் அவர் பேசினார்.
கூடவே தொடர்ந்து தன்னை சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்வது குறித்தும் கண்டனம் தெரிவித்தார். “என்னை மறுபடியும் பரட்டை என சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். எந்த இடத்திலும் என்னை அழகி என்று சொல்லவில்லையே. என்னை கேலி செய்யும் எதிர்க்கட்சியினருக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இது பரட்டை என்றாலும் என்னுடையது ஒரிஜினல் முடி” என்றார் சிரித்தபடியே. கடைசி வாக்கியத்தை திரும்பத்திரும்ப அவர் உச்சரித்த பின்னரே, திமுக தலைவரை மறைமுகமாக தமிழிசை தாக்குவது வெளிப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இணையவெளியில் தன்னை தொடர்ந்து கேலி செய்யும் எதிர்க்கட்சியினர் மட்டுமன்றி, அரசியல் கட்சித் தலைவர்களை தனிப்பட்ட வகையில் தவறாக சித்தரிக்கும் உட்கட்சியினருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் எச்சரிக்கை விடுத்தார். கட்சியின் முன்னாள் தலைவர் என்ற முறையில், முறை தவறும் பாஜகவினர் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் எச்சரித்தார்.
இதையும் வாசிக்கலாமே...