கங்கனா ரனாவத்தை பெண் காவலர் அறைந்ததில் பரபரப்பு... விவசாயிகள் போராட்டம் தொடர்பான வாக்குவாதத்தில் வெடித்த சர்ச்சை!


சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத் மற்றும் அவரை அறைந்த பெண் காவலர்

சண்டிகர் விமான நிலையத்தில் பெண் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் பாலிவுட் நடிகையும், பாஜகவின் மண்டி தொகுதி எம்.பி-யுமான கங்கனா ரனாவத்தை அறைந்ததாக பரபரப்பு எழுந்துள்ளது.

நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக இமாச்சல பிரதேசத்தில் களமிறங்கி வெற்றி பெற்றிருக்கிறார் கங்கனா ரனாவத். தீவிர பாஜக மற்றும் மோடி ஆதரவாளரான கங்கனா, தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகளால் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் இருப்பவர். இந்த சூழலில் சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியிலிருந்து மத்திய காவலர் ஒருவர் கங்கனாவை அறைந்ததாக இன்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

சண்டிகர் சம்பவத்துக்கு சற்று முன்னதாக கங்கனா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு

குல்விந்தர் கவுர் எனப்படும் சிஐஎஸ்எஃப் பெண் காவலர், கங்கனா ரனாவத்தின் விவசாயிகளுக்கு எதிரான கருத்தால் அதிருப்தி அடைந்ததில் இவ்வாறு தாக்கியதாக தெரிய வந்துள்ளது. இன்று மாலை சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்த கங்கனா ரனாவத்துக்கும், குல்விந்தர் கவுருக்கும் இடையே திடீர் வாக்குவாதம் எழுந்தது. வாக்குவாதத்தின் ஊடாக பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் தொடர்பான கங்கனாவின் கருத்துக்கு குல்விந்தர் ஆட்சேபம் தெரிவித்ததில் அங்கே புதிய மோதல் வெடித்தது.

வாக்குவாதத்தின் உச்சமாக, கங்கனா ரனாவத் தெரிவித்த ஒரு கருத்துக்கு உஷ்ணமான குல்விந்தர் கவுர், கங்கனாவை அறைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்தில் புகார் தரப்போவதாக கங்கனா கூறியதாக தகவல்கள் வெளியாயின. வாக்குவாதம் மற்றும் அறை விழுந்த சம்பவம் தொடர்பாக சிஐஎஸ்எஃப் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரிய விவசாயிகளின் போராட்டம் குறித்து கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்து இருந்தார். விவசாயிகளை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் என்றது உட்பட பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக, அவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2021ல் இதே சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்த போதும், கங்கனாவின் காரை சூழ்ந்துகொண்டு விவசாயிகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். ’விவசாயிகள் தன்னை அடித்துகொல்லும் நோக்கத்தோடு சூழ்ந்ததாக’ அப்போது அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

அண்ணாமலை ஜெயிப்பார்... பந்தயத்தில் தோற்றதால் நடுரோட்டில் அமர்ந்து மொட்டையடித்துக் கொண்ட பாஜக பிரமுகர்!

x