அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணிக்கு இடையே ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தான் கருதுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வாக்கு எண்ணும் தினத்தன்று வாக்கு எண்ணும் மையத்திற்கு வராதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்த அண்ணாமலை, செய்தியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், ”வாக்கு எண்ணும் மையத்திற்கு வேட்பாளர் வரவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. அதே நேரத்தில் அதே தொகுதியில் வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாதா?” என மழுப்பலாக பதில் அளித்தார்.
இதை தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், ”கோவை மாவட்டத்தில் 9 அதிமுக எம்எல்ஏக்கள் இருந்தும் அக்கட்சி மூன்றாவது இடத்தையே பெற முடிந்திருக்கிறது. கோவை மக்கள் அதிமுகவை முற்றிலும் நிராகரித்து விட்டார்கள். அதிமுக ஆட்சியின் ஊழல்கள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறி வருகிறோம். கோவை மக்கள் மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்கு அளித்துள்ளனர். கோவை மக்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். கோவை மக்களின் வாக்குகள் உற்சாகம் அடைய வைத்துள்ளது.” என்றார்.
பின்னர் முன்னாள் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர், அண்ணாமலை குறித்து கூறியுள்ள கருத்துக்கள் குறித்து கேட்டபோது, அவர் யார் என்று தனக்குth தெரியாது என அண்ணாமலை பதிலளித்தார். மேலும்,”எங்களின் செயல்பாடுகள் தான் இரண்டு இலக்கங்களில் வாக்குகள் வாங்க உதவியுள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக செய்து காட்டுவோம். எடுத்தவுடன் வெற்றி அடைவோம் என்று நான் கருதவில்லை. படிப்படியாகத்தான் வெற்றியை பார்க்க முடியும். அதிக அளவில் பாஜக வெற்றிகளை விரைவில் குவிக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”திமுக தொண்டர்களுக்கு என் மீது கோபம் இருந்தால் என் மீது கை வைத்து பார்க்கட்டும். நான் கோவையில் தான் இருக்கப் போகிறேன். ஆட்டை அறுத்து என் மீதான கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தவறான புள்ளி விவரங்களை பகிர்ந்துள்ளார். குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான சட்டங்களை கடும் நெருக்கடியின் பேரிலேயே கையெழுத்திட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.
ஆனால் தற்போது எஸ்.பி.வேலுமணி பாஜகவுடன் கூட்டணியில் இருந்திருந்தால் 35 இடங்களில் வெற்றி பெற்று இருப்பார் என்று கூறியுள்ளார். இதன் மூலம் இபிஎஸ், எஸ்.பி.வேலுமணிக்கிடையே அதிமுகவில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன். அதனால் தான் மாற்றி பேசுகிறார்கள். அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்பது நான் பேசுவதிலேயே தெரியும்.” என்று அவர் கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமா? - சத்யபிரதா சாஹு பதில்!