அண்ணாமலை அதிகமாகவே பேசிட்டார்... கூட்டணி இருந்தால் 35 தொகுதிகள் வரை கிடைத்திருக்கும்; எஸ்.பி.வேலுமணி கருத்து!


எஸ்.பி.வேலுமணி பேட்டி

அதிமுக, பாஜக கூட்டணி முடிந்ததற்கு காரணமே அண்ணாமலை அதிகம் பேசியதால் தான் எனவும், கூட்டணி இருந்திருந்தால் 35 தொகுதிகள் வரை வெற்றி கிடைத்திருக்கும் எனவும் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று அதிமுக அமைப்பு செயலாளரும், சட்டப்பேரவை குழு கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஜெயராம், அமுல் கந்தசாமி, வி.பி.கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது பேசிய எஸ்.பி. வேலுமணி, ”அண்ணாமலையை விமர்சனம் செய்ய விரும்பவில்லை. 20.46 சதவீத வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை விமர்சித்தது அண்ணாமலை தான். அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அதிமுகவை அவதூறாக பேசி துவக்கி வைத்தது அண்ணாமலை தான்” என்றார்.

எஸ்.பி.வேலுமணியுடன் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள்

மேலும், ”அதிமுக, பாஜக கூட்டணி விலக அண்ணாமலை தான் காரணம். இல்லையென்றால் இப்போது 30 முதல் 35 இடங்கள் வரை கூட்டணிக்கு கிடைத்திருக்கும். தமிழிசை, எல்.முருகன் காலத்தில் கூட்டணி வலுவாக இருந்தது. பாஜகவினர் கடந்த தேர்தலில் போட்டியிடும் போது வாங்கிய வாக்குகளை விட அண்ணாமலை குறைவாகத்தான் வாங்கி உள்ளார். ஒன்றரை சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஆட்சியை இழந்தோம். மீண்டும் ஆட்சியை நிச்சயமாக அதிமுக கைப்பற்றும்” என்றார்.

இபிஎஸ்சுடன் எஸ்.பி.வேலுமணி

தொடர்ந்து பேசிய அவர், ”பாஜக தான் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. சொல்லியதை கோவைக்கு அண்ணாமலை செய்ய வேண்டும். கொடுத்த நூறு வாக்குறுதிகளை அவர் உடனடியாக செய்ய வேண்டும். முக்கியமாக நீட் இருக்கக் கூடாது. இன்று அண்ணாமலை கோவையில் போட்டியிட்டு இருக்கிறார். நாளை வேறு எங்காவது நிற்பார். சிறுபான்மை மக்களுக்கு இப்போது தெளிவு கிடைத்திருக்கும். அதிமுக நிலையான முடிவில் தான் இருக்கிறது என்பது அவர்களுக்கு நன்றாக புரிந்திருக்கும். அதிமுக தலைமையில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. ஆனால் அண்ணாமலையின் தலைமை பதவியை பார்த்துக்கொள்ள சொல்லுங்கள்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

ஒரே நாளில் தங்கம் விலை ஒரே சவரனுக்கு ரூ.600 உயர்வு... மக்கள் அதிர்ச்சி!

x