நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற கல்லூரி மாணவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம் யாரகட்டி தாலுகா நுக்கனட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜா முத்தண்ணவர்(23). இவர் கல்லூரியில் எம்எஸ்டபிள்யூ படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு தனது நண்பர் மல்லிகார்ஜுனாவின் பிறந்தநாள் விழாவுக்கு பசவராஜா சென்றார்.
அப்போது பிறந்த நாளுக்கு வந்திருந்த நண்பர்களிடையே சிலருக்கு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அத்தகராறை விலக்கி விடச் சென்ற பசவராஜாவை திடீரென சிலர் கத்தியால் கயிறு, முதுகில் குத்தினர். இதனால் ரத்த வெள்ளத்தில் பசவராஜா மயங்கி விழுந்தார்.
இதனால் பிறந்த நாளுக்கு வந்திருந்தவர்கள் பதறிப்போனார்கள். அவர்கள் உடனடியாக படுகாயமடைந்த பசவராஜாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்குச் செல்லும் முன்பே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த முரகொட காவல் நிலைய போலீஸார், விரைந்து வந்து பசவராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பெலகாவி மாவட்டட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கள் மகனைக் கொலை செய்தவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று பசவராஜா முன்னண்ணவரின் தந்தை வலியுறுத்தினார். என் மகன் கல்லூரியில் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர். அவரைக் கொலை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.