கொடுத்த 20 ஆயிரம் ரூபாய் கடனைத் திருப்பிக் கேட்ட பெண்ணை கொலை செய்து புதைத்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், ராமநகரா மாவட்டம் கனகபுரா தாலுகாவின் சீனிவாசனஹள்ளி கிராமத்தைச் சேரந்தவர் சுனந்தம்மா(55). அவரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார்(43) என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். ஆனால், ஒரு வருடமாகியும் அவர் பணத்தைத் திருப்பித் தரவில்லை. இதனால், ரவிக்குமாரிடம் வாங்கிய பணத்தைத் தருமாறு சுனந்தம்மா வலியுறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் வாங்கிய பணத்தை வட்டியுடன் தருவதாகவும், அதற்கு நான் சொல்லும் இடத்திற்கு நீங்கள் வர வேண்டும் என்று ரவிக்குமார், சுனந்தம்மாவை அழைத்துள்ளார். இதனை நம்பி நேற்று முன்தினம் ரவிக்குமார் வரச்சொன்ன டி. கொல்லஹள்ளிக்கு சுனந்தம்மா சென்றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்கள சுனந்தம்மாவை தேடினர். ஆனால், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் தனது மனைவியை காணவில்லை என சுனந்தம்மாவின் கணவர், கனகபுரா ஊரக காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து பெண் காணவில்லை என போலீஸார் வழக்குப்பதிவு செய்து சுனந்தம்மாவை தேடி வந்தனர். ஆனால், அவர் குறித்த எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேச நாயக்கர் என்பவர் தோட்டத்தில் ஊழியர்கள் சானகே, சாலகே ஆகியோர் நேற்று வேலை செய்து கொண்டிருந்தனர்.
அவர்கள் தோட்டம் அமைப்பதற்காக மண்ணைத் தோண்டிய போது, சேலை தட்டுப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்த போது சுனந்தம்மா உடல் இருந்துள்ளது. இதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து சுனந்தம்மா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், சுனந்தம்மாவை கடன் தொகை தருவதாக அழைத்துச் சென்ற ரவிக்குமார், அவரை அடித்துக் கொலை செய்து வெங்கடேச நாயக்கர் தோட்டத்தில் புதைத்தது தெரிய வந்தது. இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீஸார், தலைமறைவான ரவிக்குமாரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.