வைகாசி மாத அமாவாசை... ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்


ராமேஸ்வரம் அக்னித்தீர்த்த கடல்

வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி ராமநாதசுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில், தீர்த்தம், மூர்த்தி, தலம் என்ற முப்பெருமையை கொண்டது. இங்கு ராமாயணத்துடன் தொடர்புடைய ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அமைந்துள்ளது. இங்கு, அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால், முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும் என்பது ஐதீகம்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் மக்கள்

இதையொட்டி இன்று வைகாசி மாத அமாவாசை தினம் என்பதால் அக்னி தீர்த்தக்கடலில் குளித்து, தர்ப்பணம் கொடுப்பதற்காக காலை முதலே ஏராளமான பக்தர்கள், ராமேஸ்வரத்தில் குவிந்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, தெலங்கானா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானபக்தர்கள் வருகை தந்துள்ளனர். முன்னோர் வழிபாட்டுக்காக இன்று அதிகாலை முதலே ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இவர்கள் குவிந்தனர். தொடர்ந்து, முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம், காய்கறிகள் படைத்து புரோகிதர்கள் மூலம் அக்னி தீர்த்த கடற்கரையில் வழிபாடு நடத்தினர்.

ராமநாதசுவாமி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலுக்குள் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற 22 புனித தீர்த்தங்களின் பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி மற்றும் பருவதவர்தினி அம்பாளை வழிபட்டனர். வைகாசி மாத அமாவாசை என்பதால் வழக்கத்தை விட ராமேஸ்வரம் தீவு பகுதியில் அதிகமாக காணப்பட்டது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திப் உத்தரவின் பேரில், 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

x