புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்


துணை ராணுவப்படையினர் செல்போனுடன் வந்ததால் வாக்குவாதம்

புதுச்சேரியில் வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன் கொண்டுவந்த துணை ராணுவப் படையினரை போலீஸார் அனுமதிக்காததால் அவர்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏழு கட்டங்களாக நடைபெற்றுள்ள மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்கும் எண்ணும் பணி காலை 8 மணி முதல் துவங்கி நடைபெற உள்ளது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு இன்று காலை செல்போன்களை கொண்டு வந்த துணை ராணுவப் படையினரை, போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

புதுச்சேரி மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் முகவர்கள், கண்காணிப்பாளர்கள், பார்வையாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் என அனைவரும் செயல்பட வேண்டிய வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின் படி, வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்போன் கொண்டுச் செல்ல அனுமதியில்லை.

போலீஸார் - துணை ராணுவப் படையினர் இடையே வாக்கு வாதம்

இந்நிலையில் புதுச்சேரி வாக்கு எண்ணும் மையத்துக்குள் துணை ராணுவப்படையினர் செல்போனுடன் பாதுகாப்பு பணிக்கு வந்ததாக கூறி, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் துணை ராணுவப் படையினருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் புதுச்சேரி வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

x