சென்னையில் இருந்து கிளம்பிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... உடனடியாக இறக்கி விடப்பட்ட 182 பயணிகள்!


சென்னை விமான நிலையம்

சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு கிளம்ப இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து பயணிகள் உடனடியாக இறக்கி விடப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு இன்று இண்டிகோ விமானம் ஒன்று கிளம்ப இருந்தது. 182 பயணிகள் இந்த விமானத்தில் பயணிக்க இருந்தனர். பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்ததைத் தொடர்ந்து விமான புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அப்போது துரைப்பாக்கம் பகுதியில் இருந்து வந்த மர்ம போன் ஒன்றில் பேசிய நபர் இந்த விமானத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

இதையடுத்து உடனடியாக விமானத்தின் பயணத்திட்டம் ரத்து செய்யப்பட்டு, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் விமானம் முழுவதும் ஆய்வு செய்தனர். அப்போது மர்ம பொருள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 2 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் சற்று முன்னர் சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு கிளம்பிச் சென்றது.

சென்னை விமான நிலையம்

இது தொடர்ந்து பாதுகாப்பு படை அதிகாரிகள் போனில் அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

x