மகள் பவதாரணியை மகளை இழந்த துக்கத்தில் இருப்பதால், இன்று தன் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.
மேஸ்ட்ரோ, இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா இன்று 81வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த போஸ்டரை இன்று வெளியிட்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் திரையுலக பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்களில் இளையராஜாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ’இன்று எனது பிறந்தநாள் என்பதால் நீங்கள் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்கிறீர்கள்.
ஆனால், அதே நேரத்தில் எனது மகளை இழந்த துக்கத்தில் நான் இருப்பதால், இன்று நான் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை’ என்று தெரிவித்தார்.
இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி ஜனவரி 25-ம் தேதி இலங்கையில் சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில் காலமானார். அவரது இழப்பால் வாடும் இளையராஜா தனது பிறந்த நாளைக் கொண்டவில்லை என்று இன்று அறிவித்துள்ளார்.