வெப்ப அலை: பீகாரில் தேர்தல் அலுவலர்கள் 4 பேர் உயிரிழப்பு


மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள்

வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகார் மாநிலம், அராஹ் மாவட்டத்தில் 4 வாக்குச்சாவடி அலுவலர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், அராஹ் மாவட்டத்தில் கடும் வெப்பம் காரணமாக 4 வாக்குச்சாவடி அலுவலர்கள் உயிரிழந்துள்ளதாக போஜ்பூர் மாவட்ட நீதிபதி மகேந்திர குமார் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இதுவரை, நான்கு வாக்குச்சாவடி அதிகாரிகள் இறந்துள்ளனர்.

வாக்குச்சாவடிக்கு இயந்திரங்கள், ஊழியர்களை பிரித்து அனுப்பும் ஒவ்வொரு மையத்திலும் குடிநீர், ஷெட் மற்றும் பிற வசதிகள் இருந்தபோதிலும், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது" என்றார்.

அராஹ் மக்களவைத் தொகுதியில் 7வது கட்டத் தேர்தல் நாளான நாளை (ஜூன் 1) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று 4 வாக்குச்சாவடி அலுவலர்கள் வெப்ப அலைக்கு உயிரிழந்த சம்பவம் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மற்ற அலுவலர்களிடையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் வெப்ப அலையின் தாக்கத்துக்கு இதுவரை மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 17 பேர் அவுரங்காபாத்திலும், 6 பேர் அராஹ்லும், 3 பேர் கயாவிலும், 2 பேர் பக்ஸரிலும், பாட்னாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

தகிக்கும் கோடை வெயில்

இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக வெப்ப அலைக்கு இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒடிசாவின் ரூர்கேலாவில் 10 பேரும், ஜார்கண்ட், ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 5 பேரும், உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வேளாங்கண்ணி மாதாவிற்கு தங்ககிரீடம் அணியும் நிகழ்ச்சி... மனமுருக கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை!

விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து வரும் பிரதமர் மோடி: வெளியானது புது வீடியோ

x