கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து வரும் பிரதமர் மோடி: வெளியானது புது வீடியோ


விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்யும் பிரதமர் மோடி

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்யும் புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நேற்று பஞ்சாபில் முடித்துவிட்டு, மாலையில் கன்னியாகுமரி வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள பகவதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதாதேவி அம்பாள் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி வழிபட்டார். அதைத் தொடர்ந்து விவேகானந்தரின் முழு உருவச் சிலைக்கு மலர் தூவி வழிபட்டு இரவு 7 மணிக்கு தியானத்தை தொடங்கினார்.

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி

பிரதமரின் இந்த தியானம் தேர்தல் விதிமீறல் என்றும், இதை ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளது.

இந்நிலையில் விவேகானந்தர் மண்டபத்தில் இரண்டாவது நாளான இன்று காலை பிரதமர் மோடி காவி உடையில், சூரிய பகவானை தரிசித்து வழிபடுவது, பின்னர் விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

'கன்னியாகுமரி இந்தியாவின் தென்கோடி முனையாகும். மேலும், இந்தியாவின் கிழக்கு, மேற்கு கடற்கரைகள் சந்திக்கும் இடம் இதுவாகும். இது இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலின் சந்திப்புப் புள்ளியாகவும் உள்ளது.

எனவே, கன்னியாகுமரிக்கு சென்று தேச ஒற்றுமைக்கான சமிக்ஞையை பிரதமர் மோடி அனுப்புகிறார்' என பாஜக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரியில் வரும் நாளை (ஜூன் 1) வரை பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட உள்ளார். அதே நேரத்தில் நாளை 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

x