வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் நடைபெற்ற மாதாவிற்கு தங்க கிரீடத்தால் முடிசூட்டும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இங்கு மே மாதம், மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி கடந்த 6-ம் தேதி முதல் சனிக்கிழமை தோறும் மாதா கோயிலில் திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்ய நற்கருணை ஆசிர்வாத நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி, நேற்று மாதாகுளத்தில் நடைபெற்றது.
இதில் தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதாவின் திருவுருவச்சிலைக்கு தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் மாதாவின் உருவத்திற்கு தங்ககிரீடத்தை கொண்டு முடி சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து தேர்பவனி, திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கைகளில் மெழுகுவர்த்திகள் ஏந்தி வந்து மாதா கோயிலில் வைத்து பிரார்த்தனை செய்தனர்.